Tuesday 23 February 2016

ஆப்பிள் செய்யாததை சாம்சங் செய்யும்.!



கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவிகளை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோனால் கூட செய்யமுடியாவைகள் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஐபோன் 6எஸ் கருவியால் செய்ய முடியாத 10 அம்சங்களை கேலக்ஸி எஸ்7 சீரிஸ் போன்கள் செய்கின்றன, அவைகளை விரிவாக  பாருங்கள்..!
வாட்டர் ரெசிஸ்டன்ட் :
                    கேலக்ஸி எஸ்7 கருவி IP68 தர சான்றிதழ் பெற்றிருப்பதால் தூசி மற்றும் தண்ணீர் பட்டால் எதுவும் ஆகாது, அதுவும் இந்த கருவிகள் ஒரு மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை இருந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் இந்த அம்சம் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சார்ஜிங் :

                   மைக்ரோயுஎஸ்பி மூலம் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளதால் கேலக்ஸி எஸ்7 கருவி குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்து விட முடியும். அதாவது 30 நிமிடம் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60% வரை பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். ஐபோன் சார்ஜ் ஆக மூன்று மணி நேரம் வரை ஆகும்.

வயர்லெஸ் சார்ஜிங் :
                 மற்ற சார்ஜர்களை விட சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் அம்சம் சிறப்பாக வேலை செய்யும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வயர் மூலம் சார்ஜ் செய்யும் போது க்விக் சார்ஜிங் வேகமாக இருந்தாலும் வயர்லெஸ் அம்சம் பயன்படுத்த சவுகரியமாக இருப்பதோடு நல்ல அனுபவத்தையும் வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஆட்டோஃபோகஸ் :

                     கேலக்ஸி எஸ்7 கேமரா ஐபோன் 6எஸ் கேமராவை விட அதிவேகமாக ஃபோகஸ் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகைப்படம் :

                        ஐபோன் 6எஸ் கேமராவுடன் ஒப்பிடும் போது கேலக்ஸி எஸ்7 கேமரா கொண்டு இரவு நேரம் மற்றும் குறைந்த வெளிச்சத்திலும் பிரகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

 மைக்ரோ எஸ்டி :

                       கேலக்ஸி எஸ்7 கருவிகளில் மீண்டும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை சுமார் 200 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி :

                         கேலக்ஸி எஸ்7 கருவியில் 3000 எம்ஏஎச் பேட்டரியும் எஸ்7 எட்ஜ் கருவியில் 3600 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபோன் 6எஸ் கருவியில் 1715 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவியில் 2750 எம்ஏஎச் பேட்டரி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

 சாம்சங் பே :

                           சாம்சங் பே அம்சம் அனைத்து க்ரெடிட் கார்டு ரீடர்களிலும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபோன்களில் வழங்கப்பட்டிருக்கும் ஆப்பிள் பே புதிய க்ரெடிட் கார்டு டெர்மினல்களில் மட்டுமே வேலை செய்யும்.

 ஆல்வேஸ் ஆன் :

                        கேலக்ஸி எஸ்7 போன்களில் தேதி, நேரம் மற்றும் நோட்டிபிகேஷன்களை பார்க்க வசதியாக எப்பவும் திரையை ஆன் மோடில் வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. \

விட்ஜெட்ஸ் :
                         சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் திரையில் விட்ஜெட்களை சேர்த்து கொள்ள முடியும். இதனால் சிறிய வளைந்த திரையில் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை ஷார்ட்கட் போல வைத்து கொள்ள முடியும்.

Saturday 13 February 2016

விண்டோஸ் தரும் அறியாத செயலிகள்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே நம் அன்றாட வேலைப்பாட்டின் பின்னணியில் இயங்கி வருகிறது. இதில் உள்ள அனைத்து வசதிகளையும் நாம் அறிந்திருக்கிறோமா என்றால், 'இல்லை' என்றுதான் பதிலளிக்க வேண்டியதிருக்கும். நாம் பயன்படுத்தும் செயல் உதவிகள் எல்லாம், விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும், எம்.எஸ்.ஆபீஸ் போன்ற, பிரவுசர் மற்றும் மின் அஞ்சல் செயலிகள் போன்றவை தருபவை தான். விண்டோஸ் இயக்க முறைமையும் தன்னிடத்தே பல உதவி தரும் செயலிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இதில் பல செயலிகள், பல்லாண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்தின் முன்னோடிகளிலிருந்து இன்று வரை இணைந்தே தரப்பட்டு வருகின்றன. சில, விண்டோஸ் 10 இயக்கத்தில், புதியதாகத் தரப்பட்டவையாக உள்ளன. சில, நாம் விண்டோஸ் ஸ்டோரிலிருந்து, விண்டோஸ் 10 இயக்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்படக் கூடியவையாக உள்ளன. இதோ அவை:

பலவகைப் பயன் தரும் கால்குலேட்டர்: விண்டோஸ் இயக்கம் தொடங்கிய நாள் தொட்டு, அதனுடன் தரப்படும் ஒரு செயலி, கால்குலேட்டர் ஆகும். ஆனாலும், நாம் நம் மொபைல் போன் அல்லது கூகுள் தளம் தரும் கால்குலேட்டர் வசதிகளையே பயன்படுத்துகிறோம். ஆனால், அவற்றைக் காட்டிலும் விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து வரும் கால்குலேட்டர், பலவகையான கால்குலேட்டர்களைத் தன்னிடத்தே கொண்டது என அறியாமல் இருக்கிறோம். வழக்கமான Standard கால்குலேட்டர் மட்டுமின்றி, இதில் scientific, programmer, மற்றும் statistics கால்குலேட்டர்களும் இதில் உள்ளன. இந்த கால்குலேட்டர் செயலியை இயக்கி, அதன் மெனு கட்டத்தில் View என்பதனை அழுத்தினால், அதன் கீழ் விரியும் மெனுவில், எத்தனை வகை கால்குலேட்டர்கள் அதில் அடங்கியுள்ளன என்று பார்க்கலாம். ஸ்டாண்டர், சயிண்டிபிக், புரோகிராமர், ஸ்டேடிஸ்டிக்ஸ், டிஜிட்டல் குரூப்பிங், பேசிக், யூனிட் கன்வர்ஷன், டேட் கால்குலேஷன் ஆகியவற்றுடன், ஒர்க் ஷீட்ஸ் என்ற தனி மெனுவும் கிடைக்கும். இதில் நாம் கடனுக்கு பொருள் வாங்கினால், வட்டி கணக்கிட மற்றும் கார் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது என்பதைக் கணக்கிட கணிப்பான்கள் இருப்பதனைக் காணலாம். யூனிட் கன்வர்ஷன் பயன்படுத்தி, அங்குலம்<> சென்டி மீட்டர் போன்ற அலகுகள் மாற்றக் கணக்கீட்டினை மேற்கொள்ளலாம். Date Caculation என்பதன் மூலம் நமக்குத் திருமணமாகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற தகவல்களைக் கணித்திடலாம். இது போல பல கணிப்பு வகைகளைக் கொண்ட கால்குலேட்டராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, கம்ப்யூட்டரில் நாம் பணியாற்றுகையில், கணக்கிட தனியே ஒரு கால்குலேட்டரைக் கொண்டு செயல்பட வேண்டாம். இதனையே பயன்படுத்தலாம்.
எந்த இடத்தில் இருந்தும் ஹெல்ப் பெறலாம்
இது விண்டோஸ் பயன்படுத்தும் பலர் அறியாமல் உள்ளனர். உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள நண்பர் ஒருவரின் உதவியை நாடலாம். அவர் உங்களுக்கு உதவ விரும்பினால், இருவரும் இணைய இணைப்பில் செல்ல வேண்டும். பின் அதற்கென உள்ள புரோகிராம் மூலம், உங்கள் இருவருக்கிடையே இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது, அவர் எந்த ஊரில் இருந்தாலும், வேறு நாட்டில் இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டரை அடைய முடியும். நீங்கள் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் பிரச்னை என்னவென்று அறிந்து, அங்கிருந்தவாறே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கித் தீர்க்க முடியும். இதற்கு TeamViewer அல்லது LogMeIn போன்ற புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன. இதனை விண்டோஸ் இயக்கத்தில் இருந்தும் பெறலாம். இதற்கு Control Panel > System > Advanced System Settings > Remote எனச் சென்று பார்க்கவும்.

கம்ப்யூட்டர் பேக் அப் மற்றும் பழுது பார்க்க: DISM (Deployment Imaging Service and Management) என்ற ஒரு டூலினை விண்டோஸ் தருகிறது. இதனைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் ஒன்றின் முழு இமேஜ் ஒன்றை எடுத்து பேக் அப் ஆகப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 10ல் இதனைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கிய நிறுவனம் அளித்த, தேவையற்ற புரோகிராம்களை நீக்கலாம். இன்னும் பல சேவைகளைப் பெறலாம். இதனைப் பயன்படுத்த, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன், கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோ சென்று DISM எனக் கட்டளை கொடுத்து, அதில் தரப்படும் ஆப்ஷன்களைப் பெற்று, கவனமாகப் பயன்படுத்தவும்.

புதிய கம்ப்யூட்டருக்கு பைல்களை மாற்ற: புதிய கம்ப்யூட்டர் வாங்கி, மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், பழைய கம்ப்யூட்டரிலிருந்து பைல்களை மாற்றுவது, மிகச் சிரமம் கொடுக்கும் காரியமாக இருக்கும். செட்டிங்ஸ் அமைப்பதும் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கும். இதற்கு விண்டோஸ் எளிதான டூல் ஒன்றைக் கொண்டுள்ளது. அதன் பெயர் Windows Easy Transfer. இந்த டூலைப் பயன்படுத்தி நம் பைல்கள், போல்டர்கள், படங்கள், இசை கோப்புகள், டாகுமெண்ட்கள், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள என செட் செய்யப்பட்ட போல்டர்கள் ஆகியவற்றை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். அத்துடன் இ மெயில் செட்டிங்ஸ், மெசேஜ், தொடர்பு முகவரிகளையும் மாற்றிக் கொள்ளலாம். விண்டோஸ் பயன்படுத்துவதில், பழைய கம்ப்யூட்டரில், உங்கள் வசதிக்கென அமைக்கப்பட்ட செட்டிங்ஸ் அமைப்பினை அப்படியே இதற்கும் மாற்றிக் கொள்ளலாம். விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1.ல் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, தேடல் கட்டத்தில் “easy transfer” எனத் தேடினால் இந்த டூல் கிடைக்கும். விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்களுக்கு வேறு சில செயலிகளும் இந்த வகையில் உதவுகின்றன.

பேக்ஸ் என்னும் தொலை நகலி வசதி: விண்டோஸ் சிஸ்டம் வெகு காலமாகவே, பேக்ஸ் அனுப்பும் வசதியினைத் தந்து வருகிறது. முன்பு தொலைபேசி வழியாக இணைய இணைப்பு பெற்ற போது, இதனைப் பலரும் அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது மேம்படுத்தப்பட்ட சாதனங்கள் இந்த வசதியைத் தருவதாலும், அவற்றின் விலை கட்டுபடியாகும் அளவில் இருப்பதாலும், கம்ப்யூட்டர் வழி பேக்ஸ் பயன்படுத்துவோர் குறைவே. இருப்பினும் அந்த வசதியை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
இந்த டூலுக்கு Windows Fax and Scan என்று பெயர். இதன் மூலம் பேக்ஸ் அனுப்ப, தொலைபேசி இணைப்பினை, பேக்ஸ் மோடம் ஒன்றின் மூலம் இணைக்க வேண்டும். பின்னர், கண்ட்ரோல் பேனலில் கிடைக்கும் இந்த டூல் மூலம் பேக்ஸ் அனுப்பலாம். விண்டோஸ் 10லும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.

மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்க / சோதனை செய்திட:
நாம் பயன்படுத்தும் விண்டோஸ் கம்ப்யூட்டரிலேயே, இன்னொரு விர்ச்சுவல் கம்ப்யூட்டர் (Virtual Machine) அமைக்கலாம். அந்த விர்ச்சுவல் அமைப்பில், வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். இதற்கான டூலின் பெயர் Hyper—V. இதனைப் பயன்படுத்தி, லினக்ஸ், ஏன் விண்டோஸ் 10 கூடப் பயன்படுத்தி சோதனை செய்து பார்க்கலாம். இதில் மேற்கொள்ளப்படும் எந்த கம்ப்யூட்டர் செயல்பாடும், உங்களுடைய விண்டோஸ் முதன்மைக் கம்ப்யூட்டரைப் பாதிக்காது. வழக்கமான கம்ப்யூட்டர் நம் வகுப்பறை என்றால், விர்ச்சுவல் கம்ப்யூட்டர் அதன் விளையாட்டு மைதானமாகும்.
உங்கள் கம்ப்யூட்டரில் Hyper-V இன்ஸ்டால் செய்திட வேண்டும் எனில், Control Panel > Programs and Features > Turn Windows features on or off என்று சென்று பெற்றுக் கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் சர்வராக: நம் விண்டோஸ் சிஸ்டத்தில், இணைந்தவாறே, அதில் சர்வரை அமைக்கும் டூல் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் பெயர் Internet Information Services (IIS). பொதுவாக நம் பெர்சனல் ஹோம் கம்ப்யூட்டரை, இணையத்தில் இயங்கும் அனைவரும் நுழைந்து பார்க்கக் கூடிய சர்வர் கம்ப்யூட்டராக மாற்ற விரும்ப மாட்டோம். ஆனால், எதனையும் செய்து பார்த்திட வேண்டும் என விருப்பம் இருந்தால், வெப் புரோகிராமிங் டூல்ஸ் குறித்து சற்று கற்றுக் கொண்டு, இணைய தளங்கள் அதன் சர்வர்களிலிருந்து எப்படி இயங்குகின்றன என்றும் தெரிந்து கொண்டு, இந்த டூலைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டரை சர்வராக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த டூலுடன் File Transfer Protocol (FTP) சர்வர் அமைப்பும் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி, பைல்களைத் தேக்கி வைத்து, உங்களுடைய சுற்றமும் உறவினர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அமைக்கலாம். இந்த டூலை Control Panel > Programs and Features > Turn Windows features on or off என்று சென்று பெறலாம்.

அறிமுகமில்லாத எழுத்தை அமைக்க: சில வேளைகளில், வழக்கமாக கீ போர்ட் மூலம் அமைக்கும் கேரக்டர், எழுத்து இல்லாமல், புதியதாக ஒன்று அமைக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, காப்பி ரைட் அடையாள எழுத்து (©) போன்றவற்றை டைப் செய்திட விரும்பினால், அதற்கு விண்டோஸ் கேரக்டர் மேப் (Windows Character Map) உதவுகிறது. இதனைப் பெற ஸ்டார்ட் கட்டத்தில் கிடைக்கும் தேடல் கட்டத்தில் Character Map அல்லது charmap என டைப் செய்து தேடினால், இது அத்தகைய குறியீடுகள் உள்ள எழுத்து வகைத் தொகுதியினைத் திறந்து காட்டும். தேவையான குறியீட்டினை காப்பி செய்து, டாகுமெண்ட்டில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது, குறிப்பிட்ட குறியீட்டினைத் தேர்வு செய்து, பின் இந்த விண்டோவில் கீழாக உள்ள Character Code என்ற இடத்தில் காட்டப்படும் குறியீடு எழுத்துகளை, ஆல்ட் கீயுடன் இணைத்து (+ அழுத்திய பின்), காட்டப்பட்டுள்ள குறியீடுகளை டைப் செய்து, பின்னர், ஆல்ட் கீயை விட்டுவிட்ட பின்னர், சம்பந்தப்பட்ட குறியீடு கிடைக்கும். இந்த டூல், அந்த காலத்து விண்டோஸ் தொகுப்பில் இருந்து, தற்போது வரை கிடைக்கிறது.

உடனடி ராம் மெமரி அதிகப்படுத்தல்: முன்பு விண்டோஸ் விஸ்டா தொகுப்பில், ReadyBoost என்று ஒரு டூல் தரப்பட்டது. ராம் மெமரியை, ஹார்ட் டிஸ்க் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் உள்ள இடத்தில் அதிகப்படுத்தி பயன்படுத்துவதாகும். ஆனால், இதனைச் சரியாகப் பயனாளர்களால், எளிதாகச் செயல்படுத்த முடியவில்லை. அந்த டூல் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. தொடர்ந்து, இந்த டூலின் செயல் வகையும், செயல் திறனும் மேம்படுத்தப்பட்டு வந்தது. விண்டோஸ் 10ல், இந்த வசதியின் மூலம், ப்ளாஷ் ட்ரைவிலும் நாம் ராம் மெமரிக்கான கூடுதல் இடத்தைப் பெறும் வகையில், இந்த டூல் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, விண்டோஸ் 10ல், உங்கள் கம்ப்யூட்டரில் 8 ஜி.பி. ராம் மெமரி இடம் இருந்தாலும், இன்னொரு 8 ஜி.பி. ப்ளாஷ் ட்ரைவ் கொண்டு, ராம் மெமரியைத் தற்காலிகமாக 16 ஜி.பி. ஆக்கலாம். இதற்கு, விண்டோஸ் எக்ஸ்புளோரரில், யு.எஸ்.பி.ட்ரைவின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ReadyBoost என்பதில் கிளிக் செய்து, அந்த டூல் கேட்கும் தகவலைத் தந்து, செட் செய்து விட்டால், கூடுதல் ராம் மெமரி கிடைக்கும்.
மேலே சொல்லப்பட்டவை மட்டுமின்றி, விண்டோஸ் இயக்கத்தில், மைக்ரோசாப்ட் பல வசதிகளைத் தருகிறது. அவை அனைத்தையும் தெரிந்து கொண்டால், இந்த அளவிற்குத் திறன் செறிந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமா இது! என்று வியப்படைவோம். எனவே, நேரம் கிடைக்கும்போது, இதற்கான இணைய தளங்கள் சென்று, இவற்றை அறிந்து கொள்வது மட்டுமின்றி, பயன்படுத்தியும் பார்க்கவும்.

10 கிகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு

சிங்கப்பூரில் இயங்கும் தகவல் தொடர்பு நிறுவனமான சிங்டெல் (SingTel) முதல் முறையாக, 10- கிகா பிட்ஸ் (10Gbps) வேகத்தில் இணைய இணைப்பினை, சிங்கப்பூரில் உள்ள வீடுகளுக்கு வழங்குகிறது. சென்ற ஆண்டில், சோதனை முறையில், சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 10GPON (Gigabit Passive Optical Network) என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, இந்த அதி வேக இணைப்பு சோதனை செய்து பார்க்கப்பட்டது. இத்துடன் 1Gbps வேகத்திலான போர்ட்களையும் அமைத்துத் தருகிறது. இதன் மூலம் ஒரே இணைப்பில் பலர் இணையத் தொடர்பினைப் பெற முடியும்.
10Gbps வேக இணைய இணைப்பில், இரண்டு மணி நேரம் இயங்கக் கூடிய முழு ஹை டெபனிஷன் திரைப்படம் ஒன்றினை, 90 விநாடிகளில் தரவிறக்கம் செய்திட முடியும். அதே 2 மணி நேரம் ஓடக்கூடிய 4கே திரைப்படத்தினை 6 நிமிடங்களில் தரவிறக்கம் செய்திட முடியும்.
இதற்கான கட்டணம் சிங்கப்பூர் டாலர் ஒரு மாதத்திற்கு S$189 (ஏறத்தாழ ரூ. 9,000). இரண்டு ஆண்டுகளுக்கு இந்த சேவையினை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். உடன் ஆப்டிகல் நெட்வொர்க் ரெளட்டர் தரப்படுகிறது.
அதிவேக இணைப்பு தேவைப்படும் இல்லங்களுக்கு இது ஓர் அரியசேவை என இதனை அறிமுகப்படுத்திய சிங்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.