Tuesday, 23 June 2015

ஆப்பிள்( iOS9)நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்

ஆண்டுதோறும் தன் கட்டமைப்பில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கினை நடத்துவது, பெரிய அளவில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் கருத்தரங்கினை இரு வாரங்களுக்கு முன்னர் சான்பிரான்சிஸ்கோவில் நடத்தியது. அப்போது தன் புதிய செயலிகளையும், அவற்றிற்கான கட்டமைப்பினையும், அவை வழங்கக் கூடிய நவீன வசதிகளையும் வெளிப்படுத்தியது. ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஐ.ஓ.எஸ்.9, மேக் கம்ப்யூட்டர்களுக்கான ஓ.எஸ். எக்ஸ் அப்டேட் கேபிதான் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஓ.எஸ். 2 ஆகியவை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.



ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஐ.ஓ.எஸ். 9(iOS 9): 


இந்தக் கருத்தரங்கில் மிகப் பெரிய வெளிப்பாடாகக் கருதப்பட்டது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கான அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இது iOS9 என அழைக்கப்படுகிறது. இதில் புதியதாகப் பல அம்சங்கள் தரப்பட்டுள்ளன. அவை


சிரி (Siri) செயலியில் முன்னேற்றம்:


'சிரி' என்பது ஆப்பிள் ஐபோன் 4எஸ் மற்றும் புதியதாக வந்துள்ள ஐபேட் மற்றும் ஐபாட் ஆகிய சாதனங்களில் ஒருங்கிணைந்து செயலாற்றும் ஓர் “அறிவுபூர்வமான உதவியாளன்” எனக் கூறலாம். நாம் நம் ஒலி வழிக் கட்டளைகளை வழங்கி இந்த மொபைல் சாதனங்களையும் அதன் செயலிகளையும் இயக்கலாம். இதற்கு அடிப்படையில் அமைந்திருப்பது 'சிரி' செயலியாகும். பல புதிய உத்திகளும் வசதிகளும் இதற்கென ஐ.ஓ.எஸ்.9ல் தரப்பட்டுள்ளன. தர்ட் பார்ட்டி சப்போர்ட் கொண்டு தேடுதல் பணியும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி “கூகுள் நவ்” மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய “கார்டனா” சாதனத்திற்கு போட்டியாக இயங்கும்.



 (Caller Id): 

உங்களுடைய ஐபோன் இனி உங்கள் மின் அஞ்சல் தொடர்புகளை ஆய்வு செய்து, தொலைபேசியில் அழைப்பது யார் எனக் காட்டும். திரையிலேயே இது யாரிடமிருந்து வந்திருக்கலாம் என அறிவிக்கும். 



ஆப்பிள் 'பே':


 நாம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கியவுடன், அது குறித்த தகவல்கள் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதற்கு பரிசாக ஏதேனும் 'reward card' வழங்கப்பட்டால் அவை நம் போனில் பாதுகாக்கப்படும். இந்த வகையில் இந்த தள்ளுபடி மற்றும் பரிசு தகவல்கள் சேகரிக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்குத் தயாராய் வைக்கப்படும். பின்னர், சரியான விற்பனை மையத்தில் பயன்படுத்தக் கூடிய இந்த பரிசுக் கூப்பன்களை வெளிப்படுத்தி, அவற்றைக் காசாக்க உதவும்.



வாலட் (Wallet):


இந்த வசதிக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.



கீ போர்ட்:

தன் சாப்ட்வேர் கீ போர்டினை, ஆப்பிள், ஐ.ஓ.எஸ்.9ல் விரிவுபடுத்தியுள்ளது. இதனை QuickType என அழைக்கிறது. ஒரு டூல் பார் மூலம் Cut, copy and paste செயல்பாடுகள் தரப்படுகின்றன. 



மேப் மேம்பாடு:

ஆப்பிள் தரும் மேப் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. "Transit," என்ற பெயரில் இனி, சிறிய அளவிலான வழிகள் மற்றும் பொது பயணிகள் வாகனங்கள் குறித்த தகவல்கள் காட்டப்படும். மேப்களிலேயே, ட்ரெயின் மற்றும் பஸ் பயணங்கள் குறித்த தகவல்கள் இணைக்கப்படும் எங்கு எப்போது நடந்து செல்லலாம் என்றும், குறுக்காகச் செல்லும் பாதைகளையும் இனி மேப் வழி காட்டும். Restaurants, Groceries, Bakeries என்ற வகைகளிலும் தேடலை மேற்கொள்ளலாம். 


செய்திகள் (News): 


இது ஒரு புதிய செயலி. தனிப்பட்ட முறையில் செய்திகள் தொகுக்கப்பட்டு கிடைக்கும். தற்போதைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளிலிருந்து வெளியாகும் இதழ்களுடன் இதற்கென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனி மற்ற நாடுகளில் பிரசுரிக்கப்படும் செய்தித் தாள்களும் ஒருங்கிணைக்கப்படும். இவற்றிலிருந்து ஐ போன் பயனாளரின் தேடுதல் மற்றும் விருப்பங்களுக்கேற்ப தகவல்கள் தரப்படும்.



நோட்ஸ் (Notes):

இந்த புதிய சிஸ்டத்தில், நோட்ஸ், ஏறத்தாழ நோட்பேட் அளவிற்கு புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. புதிய டூல் பார் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம், போட்டோ இணைப்பு, டெக்ஸ்ட் பார்மட்டிங், புல்லட் வரிசை ஆகியவற்றை உருவாக்கலாம். நாமே வரையும் படங்களை, குறிப்புடன் இணைக்கலாம். 



செயல்பாடும் பேட்டரியும் (performance and battery): 


புதிய மொபைல் செயலியான ஐ.ஓ.எஸ். 9, இதுவரை செயல்பட்ட இயக்க முறைமைத் தொகுப்புகளைக் காட்டிலும் 40% கூடுதலான வேகத்தில் செயல்படும். பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கும் திறனும் அளிக்கப்பட்டுள்ளது. 



ஐபேட்: 

புதிய ஐ.ஓ.எஸ்.9 செயலியில், ஐபேட் சாதனங்கள் சிறப்பு கவனத்துடன் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் கீ போர்ட் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளும் வசதி கூடுதல் அமைப்பினைப் பெறுகிறது. "slide-over" என்ற பெயரில், திரை பிரிக்கப்பட்டு, வேறுபட்ட செயல்பாடுகளை இவற்றில் மேற்கொள்ளலாம். இரண்டு அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்கலாம்.

ஒரே நேரத்தில் இரு பணிகளைத் தருவதில் இன்னொரு வகையும் மேற்கொள்ளப்பட உள்ளது. இது படங்களைச் சார்ந்ததாகும். ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னொன்றை இயக்கினால், ஏற்கனவே பார்த்துக் கொண்டிருப்பது சிறிய கட்டத்தில் காட்டப்பட்டு, புதிய படம் பெரியதாகக் காட்டப்படும். பின்னர், இந்த இரண்டினையும் கட்டம் மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே ஐ.ஓ.எஸ். 8 இயங்கிய அனைத்து சாதனங்களிலும், ஐ.ஓ.எஸ். 9 இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது ஐ.ஓ.எஸ். 9, செயலிகளை உருவாக்குபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் பொதுமக்களுக்கான சோதனைத் தொகுப்பு வழங்கப்படும். பின்னர், இது ஐபோன் 4 எஸ் மற்றும் ஐபேட் 2 சாதனங்கள் தொடங்கி, அதன் பின்னர் அறிமுகமான சாதனங்களுக்கு இலவசமாகத் தரப்படும்.


பொதுவாக மொபைல் போன்களுக்கென செயலிகளை உருவாக்குபவர்கள், ஆப்பிள் சாதனங்களுக்குத்தான் முதலில் உருவாக்குவார்கள். பின்னரே, ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்குச் செல்வார்கள். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் தான் அதிக பணம் வழங்குகிறது. (அண்மைக் காலத்தில் தான், இந்த வருமானம் தருவதில், ஆண்ட்ராய்ட் முதல் இடத்தைப் பெற்றது) 

மேலும், ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில், அதில் ஒரே வகைதான் இருக்கும். தங்கள் அப்ளிகேஷன்களைச் சோதனை செய்து பார்ப்பது எளிது. ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல வகைகள் உள்ளன. எனவே, அவை அனைத்திலும் சோதனை செய்து பார்ப்பது சற்று அதிக காலம் எடுக்கும் செயலாகும்.

இந்த ஆண்டு பயனாளர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சென்ற முறை, ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடத் தேவையான காலி இடம் 4.6 ஜி.பி. ஆக இருந்தது. இம்முறை, ஐ.ஓ.எஸ்.9க்கு, காலி இடம் 1.8 ஜி.பி. போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேக் கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓ.எஸ்.எக்ஸ் 10.11 (El Capitan)ல் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ட்ரேக் பேடில், கர்சர் இருக்கும் இடத்தை, விரல் அசைவில் தெரிந்து கொள்ளலாம். சபாரி பிரவுசர், ஸ்பாட் லைட் தேடல் ஆகியவையும் மேம்பாடடைந்துள்ளன. 

ஆப்பிள் நிறுவனத்தின் கேம் அப்ளிகேஷன் மெட்டல் (Metal) பல புதிய பரிணாமங்களைப் பெறுகிறது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தினைச் செயல்படுத்துவதில், 50% கூடுதலான வேகத்தில் இது இயங்கும். கேம்ஸ் உருவாக்கும் பல நிறுவனங்கள் ஏற்கனவே இந்த கட்டமைப்பிற்கு ஏற்ற வகையில், தங்கள் படைப்புகளை உருவாக்கி வருகின்றன.

இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சிஸ்டம் இணைந்து மேம்படுத்தப்படுகிறது. WatchOS 2 வெளியிடப்படுகிறது. கடிகாரத்தின் முகப்பு பக்கத்தில் போட்டோக்கள், போட்டோ ஆல்பம் ஆகியவற்றை இனி இணைக்கலாம். செயலிகள் அனைத்தும் வேகமாக, கூடுதல் சிறப்புடன் இயங்கும் வகையில் மேம்படுத்தப்படுகின்றன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாலட் மற்றும் மேப் ட்ரான்ஸிட் செயல்பாடுகள், ஆப்பிள் வாட்ச் சாதனங்களிலும் இயங்கும். இவற்றை வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தலாம். 
இது போல, ஆப்பிள் சாதனங்கள் அனைத்திலும் பல புதிய நவீன வசதிகளும், மேம்படுத்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Wednesday, 3 June 2015

விண்டோஸ் 10 - ல் நிறுவனங்கள் தாமாகச் APPS களைப் பதிக்க முடியாது

DwiR7q4.jpg


கம்ப்யூட்டரை வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான உரிமத்தைப் பணம் கொடுத்து வாங்கி, கம்ப்யூட்டர்களில் பதிந்து தருகின்றன. அப்போது, தங்களுடைய நிறுவனங்களின் செயலிகளையும், பிற நிறுவனங்களின் செயலிகளையும் பதிந்து தருகின்றன. இவை உங்களுக்குத் தேவையானவையா என்று அறிந்து கொள்ளாமல், தேவையற்ற பலவற்றைப் பதிந்து தருகின்றன. இவற்றை Bloatware எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இவை சில வேளைகளில், கம்ப்யூட்டரின் செயல்பாட்டு வேகத்தினை மிகவும் மந்தப்படுத்துகின்றன.

இனி வரும் காலங்களில், விண்டோஸ் 10 சிஸ்டம் பதியப்படும் கம்ப்யூட்டர்களில், மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொள்ளாத செயலிகள் எதுவும் பதிந்து தர, மைக்ரோசாப்ட் அனுமதிக்காது என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டேப்ளட் பி.சி.க்கள், விண்டோஸ் போன்களிலும் இந்த தடை இருக்கும். போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் அனுமதி பெற்ற பின்னரே, செயலிகளைப் பதிந்து தர இயங்க முடியும். இதன் மூலம் மையமாகச் செயல்படும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிந்த நிலையில் இயங்குவதை விண்டோஸ் தடுக்கிறது. ஏற்கனவே, ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இது போன்ற கட்டுப்பாடு இல்லாததால், அனைத்து போன்களிலும், பிரிந்த நிலையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இது போல அதிக அளவில் பிரிக்கப்படாமலே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இனி, விண்டோஸ் இயக்கமும் அதே போல இயங்கும். 

ஆனால், இந்தக் கட்டுப்பாடு, விற்கப்படும்போதே, மொபைல் தயாரிப்பு நிறுவனங்களால், விண்டோஸ் 10 பதிக்கப்பட்டு வரும் போன்களுக்கே பொருந்தும். தற்போது விண்டோஸ் 8.1 இயங்கும் போன்கள், தொடர்ந்து அதனை வழங்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்

டிஜிட்டல் உலகம் 2025ல் :

இன்னும் பத்து ஆண்டுகளில், இப்போது இயங்கும் டிஜிட்டல் உலகில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும்? மூர் விதியின் படி, மாற்றங்கள் ஏற்பட்டால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள் எப்படிப்பட்ட மேம்பாட்டினை அடையும் என எண்ணிப் பார்க்கலாம்.



ஆயிரம் டாலருக்கு மனித மூளை


மனிதனுக்குத் தேவையான மூளை ஆயிரம் டாலருக்கு (ஏறத்தாழ ரூ. 63,000) கிடைக்குமா? வாங்கி எங்கு எதில் எப்படி வைப்பது? எனக் குழப்பமாக இருக்கிறதா? இது மனிதனின் மூளை அல்ல; மனிதனின் மூளை எந்த திறன் அளவில் செயல்படுகிறதோ, அதே திறன் அளவு கொண்ட, அதே செயலாக்கத் திறன் சுழற்சி கொண்ட கம்ப்யூட்டர். ஒரு விநாடியில், 10,000 ட்ரில்லியன், அதாவது பத்தாயிரம் ஒரு லட்சம் கோடி அதாவது பத்து லட்சத்து பத்து லட்சம் சுழற்சிகளை ஒரு விநாடியில் மேற்கொண்டு செயல்படும் திறன் கொண்டது. மனித மூளையின் அதிக பட்ச செயல் சுழற்சித் திறன் இது என்பதால், இந்த திறன் கொண்ட கம்ப்யூட்டரை மனித மூளை என்கிறோம். பத்தாண்டுகளில், நமக்குக் கிடைக்க இருக்கும் கம்ப்யூட்டர் இந்த செயல் திறன் கொண்டதாக இருக்கும். எங்கும் எதிலும் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இடம் பெறும்.


Internet of Everything என்று அழைக்கப்படும் இத்தகையை இணைப்பு வட்டங்களில், சாதனங்களும் மனிதர்களும் இணைக்கப்பட்டு, இவர்களுக்கிடையே தகவல்கள் பரிமாறப்படும். இந்த வகையில், இணைப்பில் இருக்கும் சாதனங்கள் எண்ணிக்கை பத்தாயிரம் கோடி என்ற எண்ணிக்கையைத் தொடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாதனத்திலும் குறைந்தது 12ம் அதற்கு மேற்பட்ட சென்சார்களும் இயங்கி, அதன் இயக்கத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொண்டே இருக்கும். நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டு, பத்தாயிரம் ஒரு லட்சம் கோடி சென்சார்கள், நம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். சிஸ்கோ நிறுவனம் இது குறித்து தெரிவிக்கையில், அனைத்திலும் இணைய இணைப்பு கொண்ட வளையமானது, 19,000 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரச் சூழ்நிலையை உருவாக்கும் என்று அறிவித்துள்ளது.



புதியதொரு உலகு

முழுமையான மிகச் சிறந்த அறிவாற்றல் கொண்ட உலகம் உருவாகும். அதனை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கார்கள், சாட்டலைட் சிஸ்டம், நாம் அணிந்து இயக்கும் மொபைல் சாதனங்கள், கேமராக்கள் எனப் பல வகையான சாதனங்களில் அமைக்கப்பட்டு இயங்கும் பத்து லட்சம் கோடி சென்சார்கள் மூலம் நாம் நமக்கு வேண்டியதை, எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பெற முடியும். கேள்விகளை அமைத்தால், அதற்கான சரியான, முழுமையான பதில் நமக்குக் கிடைக்கும். அந்த அளவிற்கு நமக்கு ஒரு பரிபூரண உலகம் உருவாக்கப்பட்டு செயல்படும்.



இணைக்கப்பட்ட பல கோடி மக்கள்

இந்த உலகில் வாழும் மக்களில், 480 கோடி பேர் தொடர்ந்து இணைப்பில் இருப்பார்கள். பேஸ்புக், ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், குவால்காம் போன்ற இணைய நிறுவனங்கள், இதற்கான முயற்சிகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. ஒரு விநாடியில், இவர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் டேட்டா ஒரு மெகா பிட் என்ற அளவினைத் தாண்டியதாக இருக்கும்.



உயரும் இணைக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை

உலகப் பொருளாதாரத்தைக் கையாள்வதில், தற்போது 300 கோடி மக்கள் இணைப்பில் இருக்கின்றனர். இவர்களுடன் விரைவில் 500 கோடி பேர் இணைவார்கள். உலகப் பொருளாதாரச் சந்தையில் இவர்கள் மூலம், பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சந்தை உருவாக்கப்படும். இவர்களின் இணையத் தொடர்பு, நாம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்ட மோடம் வழி இணைப்பாக இருக்காது. குறைந்தது நொடிக்கு ஒரு மெகா பிட் வேகத்தில் இணைக்கப்பட்டு இயங்குவார்கள். இவர்களுக்கு கூகுள், க்ளவ்ட் முப்பரிமாண அச்சு, அமேஸான் இணைய சேவை, செயற்கை நுண்ணறிவு உலகம் போன்றவை உதவிடும். 



புதிய வகை மருத்துவ வசதிகள்

இன்றைக்கு இயங்குகின்ற உடல் நலம் காக்கும் மருத்துவமனை அமைப்புகள் மாற்றம் பெறும். புதிய வகை வர்த்தக முறைகளின் அடிப்படையில், மனித நலம் காக்கும் நிலையங்கள் உருவாகும். ஆண்டுக்கு 38 லட்சம் கோடி டாலர் மதிப்பில், இந்த புதிய வகை மக்கள் நலம் பேணும் அமைப்புகளில், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், எஸ்.ஏ,பி., ஐ.பி.எம். போன்ற நிறுவனங்கள் நுழைந்து, பெரிய அளவில் இயங்கத் தொடங்கும். இன்றைக்கு இயங்கும் திறனற்ற அமைப்பு ஒழிந்து போய், அதன் இடத்தில், புதிய தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் மருத்துவ வசதி தரும் அமைப்புகள் உருவாகும்.

அணிந்து கொண்டு நம் உடல் நலத்தினை அறிந்து கொள்ளும் பயோ மெட்ரிக் மொபைல் சாதனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் சாதனங்கள், நம் உடல் நலத்தைப் பேணும் அமைப்பின் தலைமை நிர்வாகியாக நாமே இயங்குவோம். வளர்ந்து வரும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்,இதய நோய், நரம்புகள் செயல் இழக்கும் நோய் மற்றும் புற்று நோயின் மூலக் கூறினைக் கண்டறியும். இவற்றைக் கண்டறிவதன் மூலம், இவற்றிலிருந்து விடுபடும் வழிகள் எளிதாக உருவாக்கப்பட்டுக் கிடைக்கும். நாம் ஒவ்வொருவரும் நமக்கென நம் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவற்றை மீண்டும் புதியதாக உருவாக்கும் திறன் பெறுவோம். இவை கெட்டுப் போனால், நமக்கு இவற்றைத் தர இருக்கும் கொடையாளிக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. காத்திருந்து மரணத்தைத் தழுவும் அவசியம் நேராது.



காட்சித் தோற்றங்கள்

பேஸ்புக் (Oculus), கூகுள் (Magic Leap), மைக்ரோசாப்ட் (Hololens), சோனி, குவால்காம், எச்.டி.சி. ஆகிய நிறுவனங்கள், பல கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, புதிய வகை காட்சித் தோற்றங்களை உருவாக்கும் வழிகளைக் காண, ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.  நாம் இப்போது பார்க்கும் திரைகள் இனி இருக்காது. மொபைல் போன், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி ஆகியவற்றில் திரைகள் இருக்காது.

இவற்றிற்குப் பதிலாக, நம் கண்களில் அணியும் சாதனங்கள், தோற்றத்தைக் காட்டும். இவை, கூகுள் அறிமுகப்படுத்திய கூகுள் கிளாஸ் போல எல்லாம் இருக்காது. நவ நாகரிக மனிதர்கள் அணியும் கண் கண்ணாடிகள் போலத்தான் இருக்கும். இதனால், இது போல காட்சிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தரப்படுவதால், பல வர்த்தக அடிப்படைகள் மாற்றம் அடையும். வர்த்தகம் பெருகும். சில்லரை வர்த்தகம், ரியல் எஸ்டேட், கல்வி, பயணங்கள், பொழுது போக்கு மற்றும் பிற அடிப்படை இயக்க வழிகளில் பெரும் அளவில் மாற்றங்கள் உருவாகும்.



செயற்கை நுண்ணறிவு


OeHnCvx.jpg
இனி வரும் பத்து ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்னும் பிரிவில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இப்போது இருக்கும் செயலிகளின் இடத்தில் புதிய செயலிகள் உருவாக்கப்பட்டு இயக்கத்தில் இருக்கும். ஐ.பி.எம்., வாட்சன், டீப் மைண்ட், வைகேரியர்ஸ் போன்றவை, அடுத்த பத்தாண்டுகளில் தேவைப்படும், செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்கும். நம்மிடம் இருக்கும் செயற்கை நுண்ணறிவு சாதனங்களை, நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் படிக்க அனுமதி தருவோம். நம் பயோ மெட்ரிக் தகவல்களை அவை படித்து முடிவுகளை அறிவிக்கும். சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கூறும். தீர்வுகள் எப்படி, எந்த வகையில் கிடைக்கும் என்பதனையும் விளக்கும். 



புதிய நாணயப் பரிமாற்றம்
ZS1Pj2b.jpg



இதுவரை Blockchain என்பது குறித்து நீங்கள் படிக்காமல் இருந்தால், அது குறித்த இணைய தளங்களைப் பார்க்கவும். ஏற்கனவே, பிட் காய்ன் (bitcoin) என்ற நாணயப் பரிமாற்றம் குறித்து, பல நாடுகளில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து தெரிந்திருப்பீர்கள். பிளாக் செயின் என்ற அடிப்படையில் தான், இந்த பிட் காயின் என்னும் கரன்சி முறை அறிமுகமானது. பாதுகாப்பான நாணயப் பரிமாற்ற முறை இனி உருவாக்கப்பட்டு, நம்முடைய நிதிப் பரிமாற்றங்கள், அசையும் அசையா சொத்துகள் விற்பனை மற்றும் பிறவகை செல்வ சொத்து பரிமாற்றங்கள் அனைத்தும், இடைத் தரகர் யாரும் இன்றி, நேரடியாக இந்த பிளாக் செயின் மூலம் நாம் மேற்கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்கி, மக்களிடையே கொண்டு செல்லலாம் என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இது நடைமுறைக்கு வரலாம்.



மாபெரும் மாற்றங்களை நோக்கி

நாம் நம்மால் நம்ப முடியாத மாற்றங்களை நோக்கி, மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இதனை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னால், தொலைபேசியும், இணையப் பயன்பாடும் எப்படி இயங்கின, இப்போது எப்படி உள்ளன என்று சற்று எண்ணிப் பார்த்தாலே போதும். நம் முன்னேற்ற வேகத்தினை நீங்கள் உணரலாம். அதே மாற்ற வேகம் இன்னும் அதிகமான வேகத்துடன், நமக்கு முற்றிலும் நம்ப இயலாத ஓர் உலகைத் தரப்போகிறது. ஏனென்றால், “நிலையானது மாற்றம் தான்”. அந்த மாற்றத்தினை எதிர் கொள்ளத் தயாராவோம்.