Monday 9 March 2015




மொபைல் போன்களில், எஸ்.எம்.எஸ். தவிர்க்க திட்டமிடுபவர்களுக்கு, இலவசமாய் கை கொடுக்கும் டூல், வாட்ஸ் அப் ஆகும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இயங்கும் இந்த அப்ளிகேஷன், எண்ணற்ற மெசேஜ்களை உலகெங்கும் அனுப்ப உதவுகிறது. மொபைல் எஸ்.எம்.எஸ். குழப்பங்களுக்கு நடுவே, மிகச் சிறந்த பயனுள்ள அப்ளிகேஷனாக இது கையாளப்படுகிறது.

நமக்கு மொபைல் சேவையினை வழங்கும் நிறுவனங்களின் எல்லைகள் தாண்டப்படுகையில், குறிப்பாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு, செய்திகளை, அதுவும் இலவசமாக அனுப்ப பயன்படுவது வாட்ஸ் அப் தான். இதன் கூடுதல் பரிமாணங்கள் குறித்து இங்கு காணலாம்.முதலில் இதன் பயனாளர்கள் எண்ணிக்கை நம்மை அசத்துகிறது. உலகெங்கும் ஏறத்தாழ 40 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த அளவு எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் எண்ணிக்கை தான், பேஸ்புக் இதனை மிகப் பெரிய அளவில் பணம் கொடுத்து வாங்கச் செய்தது.



எஸ்.எம்.எஸ். பயன்பாட்டிற்குப் பதிலாக


வாட்ஸ் அப் தந்திடும் வசதிகளில், வழக்கமான பாரம்பரிய மெசேஜிங் பணிகளில் ஒரு புதிய திருப்புமுனையைக் கொண்டு வந்தது சிறப்பாகும். செய்தி அனுப்புவதுடன், கூகுள் மேப்பில் உங்கள் இடத்தைக் காட்டலாம்; படத்தை இணைக்கலாம்; இரண்டு நிமிடங்கள் இயங்கும் விடியோவினை இணைத்து அனுப்பலாம்; சாதனத்தின் சேவ் செய்திடும் வசதியைப் பொறுத்து ஆடியோ பைல்களை அனுப்பலாம். கூடுதலாக புதிய தொடர்பு குறித்த தகவல்களை இணைக்கலாம். ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் பயன்படுத்தி வந்தவர்கள், அதில் உள்ள எமோட்டிகான்கள் இதில் இணைக்கப்பட்டிருப்பதனை நிச்சயம் வரவேற்பார்கள். ஆண்ட்ராய்ட் எமோட்டிகான்கள் இதில் இல்லை. 

நாம் சேட் செய்திடும் பின்னணியை நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். இன்ஸ்டண்ட் மெசேஜ் போன்ற நிலையையும் உருவாக்கலாம். சில மொபைல் போன்களில், இதன் போன் அலர்ட் எல்.இ.டி. நிறத்தை மாற்றும் வசதியும் தரப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், வாட்ஸ் அப், தான் தந்து கொண்டிருக்கும் வசதிகளை செவ்வனே மேற்கொள்கிறது என்பது உண்மை. மற்ற அப்ளிகேஷன்களான, ஸ்கைப் மற்றும் கூகுள் ஹேங் அவுட், விடியோ சேட்டிங் எனப்படும் காட்சி வழி உரையாடல் வசதி, வாட்ஸ் அப்பில் இல்லை என்றாலும், வாட்ஸ் அப் அதன் எல்லைக்குள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு, தன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் பெற்றுள்ளது. 



வாட்ஸ் அப் விரைவில் வாய்ஸ் அழைப்பினை இணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப், 3ஜி அல்லது வை பி இணைப்பில் மிகத் திறமையுடன் செயல்படுகிறது. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். சிம்பியன், பிளாக்பெரி மற்றும் விண்டோஸ் போன் சிஸ்டங்களில் செயல்படும் மொபைல்போன்களில் இயங்குகிறது. வைபர் (Viber) போல, வாட்ஸ் அப் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்குவதில்லை. டேப்ளட் பி.சிக்களிலும் இது இயங்காது.குழுவாக மெசேஜ் அனுப்புவதில், வாட்ஸ் அப், குறிப்பிடத்தக்க வகையில், ஆர்வம் ஊட்டும் வகையில் செயல்படுகிறது. நீங்கள், அதிக பட்சம் பத்து பேர் அடங்கிய குழு ஒன்றுக்கு, குழு செய்தியைனை அனுப்பலாம். இந்த மெசேஜுக்கு தலைப்பு ஒன்றும் (எ.கா. மாலாவின் பிறந்த நாள்) கொடுக்கலாம். இது போன்ற குழு செய்திகளை விரும்பாதவர்கள், அதனைத் தவிர்க்க செட்டிங்ஸ் அமைக்கலாம்.

இதனுடன், அல்லது இதனிடத்தில், வாட்ஸ் அப் "broadcast message." என்ற ஒரு வசதியைத் தருகிறது. இது மின் அஞ்சலில் நாம் அனுப்பும் blind carbon-copy போன்றது. ஆனால், இதற்கு, செய்தியைப் பெறுபவர்கள், தங்களுடைய தொடர்பு நபர்களில் (contact list) பட்டியலில், உங்களுடைய போன் எண்ணை அமைத்திருக்க வேண்டும். மேலே சொல்லப்பட்ட அனைத்தும் வாட்ஸ் அப் பயனாளர் எண்ணிக்கையினால் மட்டுமே சாத்தியமாகிறது. ஒவ்வொரு WhatsApp Messenger அக்கவுண்ட்டும் ஒரே ஒரு போன் எண்ணுடன் இணைக்கப்படுகிறது. 

முதன் முதலாக, வாட்ஸ் அப் இயக்கப்படுகையில், வாட்ஸ் அப் தானாகவே, உங்கள் போனில் உள்ள அட்ரஸ் புக் கொண்டிருக்கும் போன் எண்களை ஸ்கேன் செய்கிறது. பின், அந்த எண்களில் எவை எல்லாம், வாட்ஸ் அப் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்று கண்டறிகிறது. அவர்களுக்கு, நீங்கள் உடனேயே வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பலாம். நீங்கள் உங்கள் போன் எண்களை மாற்றினாலும், வேறு ஒரு போனுக்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம். இதனை உங்கள் நண்பர்கள் அறியாமல் கூட இருக்கலாம்.

உங்கள் நண்பர்களை உங்களால், கண்டறிய முடியவில்லை என்றால், வாட்ஸ் அப் அப்ளிகேஷன் உள்ளாகவே, அவர்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கலாம். இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், புதிய எண்கள் கொண்டவர்கள் உங்களுடன் இனையும் போது, அவர்கள் உங்கள் போனுடன் வாட்ஸ் அப்பிலும் இணைக்கப்படுகின்றனர். அதற்கு உங்கள் அனுமதியும் பெறப்படுகிறது. ஒவ்வொரு முறை நீங்கள் புதிய காண்டாக்ட் எண் ஒன்றை இனைக்கையில், வாட்ஸ் அப் அனைத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்கிறது.


பாதுகாப்பு:


வாட்ஸ் அப் செயல்திறன் மிக உயர்வாக இருந்தாலும், அதன் பாதுகாப்பு தன்மை குறித்து சிறப்பாக பேச முடியவில்லை. இந்த அப்ளிகேஷன் செயல்பாட்டில், encryption பயன்பாடு இல்லை. இதனால், பலமுறை போன்களில் உள்ள எண்கள் மற்றும் பிற தகவல்கள் திருடப்படுவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், தொடர்ந்து இந்த நிலை மாறி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த வகையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், புதியதாக வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் மெசஞ்சர் அப்ளிகேஷன் Wickr சரியான பாதுகாப்புடன் இயங்குவதாகக் கூறப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் அப்ளிகேஷனுக்குக் கிடைத்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, அதற்குக் கிடைத்துள்ள புகழ் ஆகியவை தான், இந்த பிரிவில் இயங்கும் திருடர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளதாக அனைவரும் கூறி வருகின்றனர். எனவே, வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் போலியான அப்ளிகேஷன்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். அவை விரிக்கும் வலையில் விழுந்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment