Sunday 28 June 2015

4ஜி அலைவரிசைத் தொடர்பு

sAErQx2.jpg
இந்தியாவில், தகவல் தொழில் நுட்பத் துறையின் பெரிய எதிர்பார்ப்பு தற்போது 4ஜி அலைவரிசைத் தொடர்பு குறித்துத் தான். அண்மையில் நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்திற்குப் பின்னர், பலரும் இது குறித்துப் பலமான எதிர்பார்ப்புகளை மேற்கொண்டுள்ளனர். 4ஜி, இந்தியாவில் டேட்டா பரிமாற்றத்தில் புதியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அது நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.
சீனாவிற்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையில், மொபைல் போன் பயனாளர்களைக் கொண்டுள்ள இந்தியாவில், 4ஜி பயன்பாடு வளராமல், இன்னும் பெரும்பாலான பயனாளர்கள், 2ஜி நெட்வொர்க் சேவையினையே பயன்படுத்தி வருவதற்கு, இவர்களின் வாங்கும் நிலைக்கேற்ற போன் சாதனங்களும், 4ஜி கட்டணத் திட்டங்களும் இல்லாமையே காரணங்களாகும். இதனைச் சரி செய்திட நாம் பிற நாடுகளை நோக்காமல், நம் பயனாளர்களின் பயன் தன்மையிலிருந்துதான் அறிந்து கொள்ள வேண்டும். டேட்டா பெற்று பயன்படுத்தும் வகைகள், வாடிக்கையாளரின் தன்மைகள், பொருளாதார நிலைகள் மற்றும் சார்ந்த பிறவுமே, நிலைமையச் சீராக்க நமக்கு உதவும் என இந்திய செல்லுலர் ஆப்பரேட்டர்கள் அமைப்பின் தலைவர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ”தேவை, கட்டணம் குறித்து வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள், வாடிக்கையாளர் எப்படிப்பட்ட டேட்டா பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் மற்றும் பிற தகவல்களை, இந்தப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் அறிந்து, அவற்றின் அடிப்படையில் தங்கள் திட்டங்களை அமைக்க வேண்டும்.”
ok5GchO.jpg?1
இந்தியாவில், 3ஜி அலைவரிசைப் பயன்பாடு பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. பயனாளர்கள், இன்னும் பழசாகிப் போன 2ஜி அலைவரிசைத் தொடர்பினையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 3ஜி இந்தியாவில் மிகவும் மந்த நிலையில் மேற்கொள்ளப்படுவதற்கு, அதற்கான கட்டணமே முதன்மைக் காரணமாக இருந்து வருகிறது. இந்த பிரிவில் செயல்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய லாப விகிதத்தினைப் பெருக்குவதற்கே முதலிடம் தந்து வருகின்றனர். மிக அதிகமாகிப் போன ஸ்பெக்ட்ரம் கட்டணத்தினால், குறைந்த கட்டணத்தில் 3ஜி இணைப்பினை மக்களுக்குத் தர முடியவில்லை என இவர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். 2014 முடிவில் 10 கோடி பேர் 3ஜி பயனாளர்களாக இருந்தாலும், இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது 2ஜி அலைவரிசை தொடர்பினைத்தான்.
தற்போது இந்த சூழ்நிலை மாறிவருகிறது. ஒருங்கிணைந்த 4ஜி உரிமத்தினைப் பெற்றுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இதனை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில குறிப்பிட்ட மண்டலங்களில் 4ஜி இயக்க, உரிமம் பெற்றுள்ள பாரதி ஏர்டெல் நிறுவனமும், தன்னுடைய கட்டணத் திட்டங்களில் பெரும் அளவு குறைத்ததுடன், பல சலுகைகளையும் தரத் தயாராகி வருகிறது. தற்போது இந்த முயற்சியில் வீடியோகான் நிறுவனமும் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலைகளில், இந்தியாவில் 4ஜி சேவையுடன், இணையச் சந்தை சிறப்பானதாக அமையும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
4ஜி வெற்றி பெறுவதற்கு, மக்களின் ”வாங்கும் நிலையே” முக்கிய காரணமாக இருக்கப் போகிறது. ரிலையன்ஸ் நிறுவன அதிபரும் இதனையே தன் குறிக்கோளாகக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரூ. 5,000க்கும் குறைவான விலையில், 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும் மொபைல் போன்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறார். மற்ற நிறுவனங்களுடனும் இதே போல் குறைவான விலையில், 4ஜி நெட்வொர்க் போன்களையும், பிற டிஜிட்டல் தொடர்பு சாதனங்களையும் கொண்டு வர பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
8gMkqdf.jpg?1
”இனிமேல், பிராட்பேண்ட் இணைய இணைப்பு மற்றும் பிற டிஜிட்டல் சேவைகள், ஓர் ஆடம்பர வசதியாக இந்தியாவில் கருதப்பட மாட்டாது” என உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 22 ஆவது இடத்தைப் பெற்றுள்ள ரிலையன்ஸ் அம்பானி, தன் நிறுவனப் பங்குதாரர்களின் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனமும் தன் 4ஜி டேட்டா திட்டங்களுக்கான கட்டணத்தை 31% வரை குறைத்துள்ளது. ஏறத்தாழ 3ஜி அலைவரிசைக்கான கட்டண அளவிலேயே, 4ஜி கட்டணத்தையும் அமைத்துள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் ஜியோ தன் 4ஜி நெட்வொர்க்கினை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரும் முன்னர், பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களைத் தன் பிடியில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே, 2ஜி டேட்டா கட்டணத்தில் 4ஜி சேவையை வழங்கத் திட்டமிடுவதாக அறிவித்துள்ளது. இதனால், 4ஜி சேவை வழங்குவதில் நிறுவனங்களுக்கிடையே நிச்சயம் நல்ல போட்டி இருக்கும் என்றும், இதனால், மக்களிடையே 4ஜி பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில் அரசும் சில வழிமுறைகளைக் காட்ட வேண்டும். குறிப்பாக, நெட்வொர்க் இயங்குவதில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.  ஏற்கனவே, ரோமிங் கட்டண விகிதங்கள், உரிமங்கள் புதுப்பித்தல் ஆகியவற்றில் அரசின் கொள்கைகள் நிறுவனங்களிடையே ஒரு தெளிவற்ற நிலையை மேற்கொள்ளவே உதவின. இதனைத் தவிர்த்து, உறுதிப்பாடான நிலையை மேற்கொண்டு, தன் நிலையை அரசு நிறுவனங்களுக்கு உணர்த்த வேண்டும்.
வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, 4ஜி அலைவரிசைப் பயன்பாடு, அதிவேக டேட்டா பரிமாற்றம் ஆகியவற்றை விரும்புபவர்களாகவே இருக்கின்றனர். இவர்களின் தேவைக்கேற்பவும். வாங்கும் நிலைக்கேற்பவும், நிறுவனங்கள் திட்டங்களை அமைத்துத் தந்தால், நிச்சயம் 4ஜி அலைவரிசைப் பயன்பாடு மக்களிடம் அதிகம் பரவும் வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment