Sunday 24 January 2016

புதிய பிழைச் செய்தி 451:

இரு வாரங்களுக்கு முன், பிரவுசர் தரும் பொதுவான பிழைச் செய்திகள் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அண்மையில், புதிய எண்ணுடன் கூடிய பிழைச் செய்தி ஒன்றினை, இணையத்தைக் கண்காணிக்கும் பொறியியல் குழு (Internet Engineering Steering Group) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த பிழைச் செய்தி எண் 451. ஏதேனும் இணைய தளப் பக்கங்களை, அரசு நிர்வாகம், மக்கள் பார்க்கக் கூடாதவை என முடிவு செய்து, தடுக்கும் போது, இந்த பிழைச் செய்தி காட்டப்படும். குறிப்பிட்ட இணைய தளத்தினை எந்த அமைப்பு தடுத்துள்ளது என்ற தகவலும், இந்த பிழைச் செய்தியில் காட்டப்படும்.
இந்த பிழைச்செய்தி குறியீடு எண் 451 என ஏன் தரப்பட்டது தெரியுமா? Fahrenheit 451 என்ற புகழ்பெற்ற நாவலை கெளரவப்படுத்தும் வகையில் இந்த எண் தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் Ray Bradbury என்பவர். 1953 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் மிகச் சிறந்த படைப்பு என அனைவராலும் பாராட்டு பெற்றது. இதில், அரசின் தீயணைப்பு துறையே, நாட்டில் உள்ள அனைத்து நூல்களையும் நெருப்புக்கு இரையாக்கிவிட்டு, மக்களை தொலைக் காட்சி பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது. இதனால், மக்கள் நூல்களைப் படிக்கும் பழக்கத்தினை மறந்து, டி.வி. காட்சிகளையும், செய்திகளையும் மட்டுமே பார்க்கின்றனர். இது போன்ற ஒரு நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என அறிவுறுத்தும் நாவல் தான் இது. அறிவு சார்ந்த விஷயங்களை அரசு தன் அதிகாரத்தைக் கொண்டு தடை செய்வதனைக் கேலி செய்து எச்சரிக்கும் நாவலாக மக்கள் இதனைக் கருதுகின்றனர்.
இதில் 'பாரன்ஹீட் 451' என்ற வெப்ப நிலை, தாள் தீப்பற்றிக் கொள்ளும் வெப்ப நிலையைக் குறிக்கிறது. இதே பெயரில், 2010 ஆம் ஆண்டில் கம்ப்யூட்டர் கேம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment