Sunday 24 January 2016

மின் அஞ்சல்கள்: ஆச்சரியமூட்டும் தகவல்கள் :

மின் அஞ்சல்கள் இல்லாத ஓர் இணையத்தை நம்மால் எண்ணிப் பார்க்க இயலுமா?
''அய்யய்யோ'' என்று நீங்கள் கூக்குரலிடுவது கேட்கிறது. ஏனென்றால், மின் அஞ்சல் நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாக மாறி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை எல்லாரும் உணர்ந்துள்ளனர். ஆனால், மின் அஞ்சல்கள் குறித்த சில தகவல்களைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திகைக்க வைத்திடும் தகவல்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஒவ்வொரு நாளும், குத்து மதிப்பாக, 20,500 கோடி மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு விநாடியிலும், 24 லட்சம் அஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 90% ஸ்பேம் மெயில்கள் என எடுத்துக் கொண்டாலும், மிஞ்சி நிற்கும் அஞ்சல்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
2. மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில், 91% பேர், தினந்தோறும் ஒரு முறையாவது தங்கள் அஞ்சல் கணக்கைக் காண்கின்றனர். இணையம் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது. இந்த வகையில், மின் அஞ்சல்கள் சரியான இடத்தைப் பிடித்துள்ளன.
3. மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில், 75% பேர் தங்கள் ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். இந்த தகவல் தான், மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்பதைக் காட்டியது.
4. ஜிமெயில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு கோடியை எட்டிவிட்டது. இந்த உலகின் ஜனத்தொகை 700 கோடியை எட்டியுள்ளது. இவர்களில், இன்னும் பெரும்பாலானவர்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே, இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் பயன்படுத்துகின்றனர் என்பது, பெரும் வியப்புக்குரிய செய்தியே.
5. நல்ல திறமையுடன் மின் அஞ்சல்களை, வர்த்தகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினால், நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும், ரூ.4,500 லாபம் ஈட்டலாம். அதனால் தான், நாம் பல ஸ்பேம் மெயில்களை, நாள்தோறும் பெறுகிறோம்.
என்ன, இந்த தகவல்களைப் படித்து தலை சுற்றுகிறதா? இதில் நாமும் ஓர் அங்கம் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment