Monday 25 May 2015

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில் சீனாவில் நடைபெற்ற WinHEC தொழில் நுட்ப கருத்தரங்கில், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமை குறித்து கருத்து தெரிவிக்கையில், தன்னுடைய விண்டோஸ் 7, விண்டோஸ் போன் 8.1, விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோர் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த கிடைக்கும் என அறிவித்தது. அப்போது, மேற்காணும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின், திருட்டு நகலைப் பதிந்து பயன்படுத்தியவர்களும், இலவசமாக புதிய சிஸ்டத்தினைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

Q7ERZHC.png?2


ராய்ட்டர்ஸ் போன்ற செய்தி நிறுவனங்களிடமும் இது தெரிவிக்கப்பட்டது (http://recode.net/2015/03/18/microsoft-tackles-china-piracy-with-free-upgrade-to-windows-10/). அதனாலேயே, விண்டோஸ் நூறு கோடி சாதனங்களில் இயக்கப்படும்  ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பெருமையைச் சில ஆண்டுகளில் பெறும் என்றும் கூறியிருந்தது. ஆனால், இப்போது, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மேம்படுத்திக் கொள்வது, திருட்டு நகல் பயன்படுத்துபவருக்கு இலவசம் அல்ல என்று மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவின் தலைவர் டெர்ரி மையர்சன் தன் வலைமனைக் குறிப்பில் (http://blogs.windows.com/bloggingwindows/2015/05/15/genuine-windows-and-windows-10/) கூறியுள்ளார்.


அதற்குப் பதிலாக, அவ்வாறு தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோரின் சாதனங்களை “முறையானவை அல்லாத நிலையிலேயே (a Non-Genuine state)” மைக்ரோசாப்ட் வைத்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை இரு பொருள் தரும் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம். திருட்டு நகல் பயன்படுத்தி வருபவர்கள், விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொண்டாலும், அவை திருட்டு நகல் எனவே காட்டப்படும். அதற்கான நினைவூட்டல்கள் தொடர்ந்து அனுப்பப்படும். இதனை ஆங்கிலத்தில் nagware என அழைப்பார்கள். அதாவது, “ஏய்! உன்னிடம் உள்ளது திருட்டு நகல்” என நச் நச் என்று சொல்லிக் கொண்டே இருக்கும். திருட்டு நகல் என்ற வாட்டர்மார்க் ஒன்று தொடர்ந்து காட்டப்படும். அப்கிரேட் இலவசமாக அனுமதிக்கப்படும்; ஆனால், அது நியாயமானது அல்ல என்று காட்டப்படும்.


மேலும், அதிகாரபூர்வமற்ற சிஸ்டம் வைத்திருப்பவர்களின் கம்ப்யூட்டர்களில் மால்வேர் பரவும் அபாயம், தனிநபர் தகவல்கள் திருடப்படுதல், ஏமாற்று வேலைகளுக்குள்ளாதல் ஆகியவை எளிதாக ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திருட்டு நகலினை ஏற்கனவே வைத்திருப்பவர்களுக்கு, அவர்களைக் கவரும் வகையில், பல புதிய வசதிகள் இருப்பதைக் காட்டுவோம் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள், குறிப்பாக சீனாவில், தாங்கள் தரும் கம்ப்யூட்டர்களில், அதிகாரபூர்வ அனுமதி பெற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இருப்பது போன்ற மாயைத் தோற்றத்தைத் தருகின்றன. எனவே, தாங்கள் தவறு செய்கிறோம் என்பதை அறியாத வாடிக்கையாளர்களே அதிகம். அவர்கள் நிச்சயமாய், கட்டணம் செலுத்திப் புதிய இயக்க முறைமையை வாங்குவார்கள் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.


அது போன்ற சிஸ்டங்கள் வைத்திருப்பவர்கள், போலியான சிஸ்டம் எனக் காட்டப்படும் வாட்டர்மார்க் அடையாளத்தைக் காட்டி, அந்த கம்ப்யூட்டரை, வாங்கிய நிறுவனத்திடமே திரும்பக் கொடுக்கலாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்னொரு வழியில் பார்த்தால், திருட்டு நகல் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து மேம்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள், சரியான விண்டோஸ் 10 பதிப்பு வேண்டும் எனில், கட்டணம் செலுத்தி மட்டுமே பெற அனுமதிக்கப்படுவார்கள், எது எப்படி இருந்தாலும், மைக்ரோசாப்ட் முன்பு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற்றது, அதன் வாடிக்கையாளர்களுக்கு சற்று நெருடலாகவே தான் உள்ளது.



அதே நேரத்தில், திருட்டு நகல் பயன்படுத்துபவர்கள், எதனையும் இலவசமாகப் பெற எண்ணுவதும் தவறே.

No comments:

Post a Comment