Saturday 3 December 2016

பிரவுசர் போட்டியில் பின் தங்கும் மைக்ரோசாப்ட்

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், புதிய வகையில், புதிய இஞ்சின் அடிப்படையில் செயல்பாட்டைக் கொண்ட பிரவுசர் ஒன்றை, Edge என்ற பெயரில் மைக்ரோசாப்ட் வழங்கியது. இதற்கென தனி சிரமம் எடுத்து, அனைத்து வகையிலும் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும், தொழில் நுட்ப ரீதியிலும், பயனாளர் விரும்பும் வகையிலும் வடிவமைத்துத் தந்தது. ஆனால், இந்த முயற்சிகள் அனைத்தும் இருந்தும், மைக்ரோசாப்ட் நிறுவனம், பிரவுசர் போட்டியில் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்த ஆண்டில், இதுவரை, 33.1 கோடி பயனாளர்கள், எட்ஜ் பிரவுசர் பயன்படுத்துவதிலிருந்து விலகி, கூகுள் குரோம், மற்றும் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
எட்ஜ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டு பிரவுசர்களையும் பயன்படுத்தியவர்களில், 33.1 கோடி பேர் மற்ற பிரவுசர்களுக்கு மாறியுள்ளனர். சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், 4 கோடி பேர் இவ்வாறு பிரவுசர்களை மாற்றியுள்ளனர். Net Applications என்னும் ஆய்வு அமைப்பு இந்த தகவல்களைத் தந்துள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள், மாறிய பயனாளர்களின் எண்ணிக்கை 33.1 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாறுதல், திடீரென ஏற்படாமல், ஆண்டு முழுவதும் ஒரே வகையில் சீராக ஏற்பட்டுள்ளது. மே மாதம் வரை சீராக இருந்த இந்த மாறுதல், அதற்குப் பின்னர் சற்று அதிகமாகவே இருந்ததாக, பிரவுசர் பயன்பாட்டைக் கவனித்து வரும் அமைப்புகள் அறிவித்துள்ளன.
எட்ஜ் பிரவுசரை விட்டு விலகிச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள், பயர்பாக்ஸ் பிரவுசரையே தேர்ந்தெடுக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன், பயர்பாக்ஸ் பிரவுசரின் பயனாளர்கள் பலர் அதனை விட்டு வந்த வண்ணம் இருந்தனர். தற்போது, எட்ஜ் பிரவுசர் பிடிக்காதவர்கள், அதன் பக்கம் செல்லத் தொடங்கியுள்ளனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பயனாளர்களை முழுமையாக இழக்கும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்குத் தரும் உதவியை நிறுத்திவிட்டது.
எட்ஜ் பிரவுசர் விண்டோஸ் 10 சிஸ்டம் பயன்பாட்டில் மட்டுமே கிடைக்கிறது. எட்ஜ் பிரவுசருக்கு பயனாளர்கள் குறைவாக இருப்பது இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், 22% பேர் மட்டுமே விண்டோஸ் 10 பயன்படுத்துகின்றனர் சென்ற அக்டோபரில் எடுத்த கணக்கின்படி, விண்டோஸ் 7 பயனாளர்கள் 48%. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை 2.17% பேரும், விண்டோஸ் எக்ஸ்பியை 8.27% பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு மாறாக, குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களை, அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தலாம். ஏன், மேக் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் பயன்படுத்தலாம்.
எனவே தான் விண்டோஸ் 10 சிஸ்டம் பயன்படுத்துபவர்களை, எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தும்படி, மைக்ரோசாப்ட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இது நேர்மாறாகச் செயல்பட்டுள்ளது. இந்த தொடர் வலியுறுத்தல், பயனாளர்களிடம் ஒருவித திருப்தியின்மையை உருவாக்குகிறது. இதனால், எட்ஜ் பிரவுசருக்குப் பலர் முழுக்கு போடுகின்றனர். இந்த வழி செல்லாமல், பயனாளர்களுக்கு மேலும் பல கூடுதல் வசதிகளை எளிமையாகத் தந்தால் தான், பயனாளர்கள் எட்ஜ் பிரவுசருக்கு மாறி, அதிலேயே தொடர்ந்து பயணிப்பார்கள்.

No comments:

Post a Comment