Saturday 3 December 2016

பத்து கோடி பயனாளர்களின் யு.சி. பிரவுசர் :

அலிபாபா மொபைல் பிசினஸ் குரூப் என்னும் நிறுவனம் வழங்கும் யு.சி. பிரவுசரை (UC Browser), இந்தியாவில் மாதந்தோறும் 10 கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Stat Counter என்னும் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 57% போன்களில் இந்த பிரவுசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 25% இப்பயன்பாடு அதிகரித்து வருகிறது. சென்ற ஜூன் மாதம் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 8 கோடியாக இருந்து, தற்போது 10 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் இதுதான். ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த பிரவுசர் இந்தியாவில் அறிமுகமானது. இந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் இருப்பதால், இந்தியாவில், தாங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக் போல இணைய உலகில் வலிமையுடன் இருப்பதாக, யு.சி. பிரவுசர் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். பயனாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கம் இருந்தாலும், நாங்கள் வழங்கும் தகவல்களை மக்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் செம்மைப் படுத்துவதே தங்களின் முதன்மைப் பணி என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில், இணையம் பயன்படுத்தும் 46.2 கோடி பயனாளர்களில், 37.1 கோடி பேர் மொபைல் வழி இணையம் பயன்படுத்துகின்றனர். இதனை இந்தியாவில் இயங்கும் Internet and Mobile Association (IAMA) என்ற அமைப்பு அறிவித்துள்ளது. இதனால், யு. சி. பிரவுசர், வெறும் பிரவுசராக மட்டும் வடிவமைக்கப்படாமல், மக்கள் விரும்பும் தகவல்களைத் தரும் தளமாகவும் இயங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென பல பொழுது போக்கு நிகழ்ச்சிகள் தரும் நிறுவனங்களுடன், யு.சி. பிரவுசர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை Colors TV மற்றும் Fox Star Studios'. இதன் பல பிரிவுகளில் இசை நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.
We Media என்ற நிகழ்வில், பயனாளர்கள் தங்கள் படைப்புகளை அளிக்கலாம். UC News பகுதியில் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதில் பல லட்சக்கணக்கான பயனாளர்கள் பங்கு கொண்டு வருகின்றனர். பல சமுதாய பிரபலங்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.
UC Cricket என்னும் பிரிவில் கிரிக்கெட் குறித்த தகவல்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு தரப்படுகின்றன. அடுத்து வர இருக்கும் போட்டிகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன. நினைவூட்டப்படுகின்றன.
யு.சி. பிரவுசர் தன் இயக்க வேகத்தினைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு, பயனாளர்கள் விரும்பும் பலமுனைத் தகவல்களைத் தருவதால், அதன் பயனாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

No comments:

Post a Comment